May 24, 2010

திரவியம் தேடுதல்

போட்டிருக்கும்
கோட்டும் சூட்டும்...
குளிர்சாதன அறை
சொகுசுக் கார்...
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டோடு
தூர தேசங்களில்
அனுபவிக்க எத்தனையோ -
அனுபவிப்பவன்
தன்னை மட்டும் தொலைத்திருப்பான்!

லட்சங்களைத் தாண்டும் மாத சம்பளம்
ஐந்து ஆண்டு உழைப்பு
இழப்பை நினைக்கையில் கணக்கிறது
மனமும் வாழ்க்கையும்!

வயதாகிக் கொண்டே போகும் தாய்
வளர்த்துவிட்ட வீட்டுச் செல்ல நாய்
விலகியிருக்கும் நாட்கள்
முகம் மறந்த நண்பர்கள்
இருப்பைத் தொலைத்துவிட்டு
எதையோ தேடுகிறோம்!

அழுகின்ற உள்ளத்தைச்
சிரிக்கின்ற உதடுகளால்
மறைத்துவிட்டுப் புறப்படுகையில்
பாத்துப்போப்பா என்று தாயும்
ஒழுங்கா இருடா, கரெக்டா சாப்பிடுடா, என்று கூடப்பிறந்தவளும்
போனவுடனே போன் பண்ணுடா என்று தம்பியும்
ஆளுக்கொரு அஸ்திரம் தொடுக்க
காற்றில் தோய்ந்து
காதில் புகுந்து
இதயம் தைத்துவிடும்
வார்த்தைகள்!

இதயம் இறக்கி
இயந்திரமாய்ப் பயணம்...
சொப்பனத்தில் மட்டும்
நிம்மதி தேடும் மனது!

ஒவ்வொரு முறையும் விமானம் புறப்படுகையில்
தாய்ப்பசுவிடம் இருந்து தூக்கிச் செல்லப்படும்
கன்றின் பரிதவிப்பு
கலங்கும் மனது!

மச்சான்
"ஆல் தி பெஸ்ட் டா"
கல்யாண வாழ்த்துக்கள்
லீவு கிடைக்கல - போட்டோ
மெயில்ல அனுப்புடா.
தங்கச்சிகிட்ட என்னைப்பத்தி
ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லி வைய்யடா...
என்று
தொலை பேசி வாழ்த்தொலிகள்
சிரிக்கும் வார்த்தைகளுடனே
ஊமை அழுகை
யாருக்கும் தெரியாமல்!

தொலைத்துக் கொண்டிருக்கும் இளமை...
தோற்றுப்போன காதல்...
கனவுகள் நிறைந்த எதிர்காலம்...
எல்லாவற்றை மறந்துவிட்டு
எதைத் தேடுகிறோம்
மௌனம் மட்டுமே பதில்!

பர்கரும் பட்வைசர் பீரூமாய்
கடக்கும் காலங்களில்
ஊர் நினைவுகள் மட்டுமே
உள்ளத்துக்கு இதம்!
ஏசி அறையில், மெத்தை தரும் சுகத்தில்
தலையணை மட்டும் அறியும்
நம் கண்ணீரின் சுவையை!

தேவைகளைத் தீர்க்க வந்து...
தேவைகள் இன்னும் தீராத வாழ்க்கை
வீட்டிற்கு ஏங்கும் மனதிற்கு
எதை எதையோ சொல்லிச் சமாதானம்

பணம் அனுப்பும் நாளில் மட்டும் - எதையோ
சாதித்து விட்ட உணர்வு
அது தரும்
அடுத்தமாத வேலைக்கான உத்வேகத்தை!

தாய் மாமனாகப் பரிணாமம் பெற்றும்,
தங்கை குழந்தையின்
காதுகுத்து வைபவத்தில்
கலந்து கொள்ள முடியாத பரிதாபம்!

சொந்தங்கள் சொல்கிறார்கள்
இவனுக்கு என்னப்பா?
ஆமாம் எனக்கு என்ன?
வாழ்கையைக் குடும்பத்திற்காக அர்ப்பணித்த பின்னே!

ஒருநாள் வரும்
இறக்கி வைப்பேன்
இதயம் சுமக்கும் துயரங்களை!

அதுவரை - என் இனியவர்களுக்கு
இந்தத் தொலைபேசியும், மின்னஞ்சலும்
ஆறுதல் அளிக்கட்டும்!

வலித்தாலும் இனிக்கிறது வாழ்க்கை!
அப்பன் பழனி முருகன் தந்த வாழ்க்கை!!!

No comments:

Post a Comment